Symbiotic relationship of Sustainability and Minimalism

நிலைவாழ்வு

பெருகும் எதுவும் இடர் தரும். பெருகும் காற்று, தீ, நீர், மணல் என அனைத்தும் உயிர் வாழ்க்கைக்கு துன்பம் தர வல்லது. பெருகும் பருப்பொருட்கள் மனிதனால் சமாளிக்க முடியாத எண்ணற்ற மாற்றங்களை நிகழ்த்துவதாக இருக்கிறது. முதலாளித்துவ நுகர்வோர் கலாச்சாரம் பொருட்களை பெருக்குவதில் நாட்டம் கொண்டது. பெருகும் பொருள் உற்பத்தி அதைச் சுற்றியுள்ள சமநிலையை குலைத்தே தீரும். பொருட்கள் கூடும்தோறும் தன்னுடைய வல்லமை அதிகரிப்பதாகவே மனித மனம் எண்ணும். தொல்மனிதனின் கையில் கிடைத்த கல் அவனின் தற்காப்பு ஆற்றலை, பாதுகாப்பை, கலையுணர்வை அதிகரித்தது. அங்கு தொடங்கி தீ மூட்டுதல், இரும்பு உருக்குதல், இயந்திரம் படைத்தல், மின்சார உற்பத்தி, வானலை தொடர்ப்பு என தன் வல்லமையின் அதிகாரத்தை பெருக்கியுள்ளான்.

பொருட்கள் பெருகுவதால் நிச்சயமற்ற தன்மையை கிட்டத்தட்ட இல்லாமல் செய்யலாம் என்ற எண்ணம் பிறந்தது. சுவர் எழுப்புதல், ஆடை நெய்தல், செருப்பு அணிதல், சக்கரம் செதுக்குதல், பானை செய்தல் என செயல்கள் பொருட்களில் குவிய ஆரம்பித்தது. புறத்தே குவியும் அனைத்தும் சரியவே செய்யும். சமநிலை  குழைவதால் அச்சரிவு நிகழும். குறிப்பிட்ட உயரம் தாண்டும்போது மணல், கல், பனி குவியல்கள் சரியத் தொடங்குகிறது. இயற்கை நுன்சரடு கொண்டு எண்ணற்ற வலைப்பின்னல்களால் இப்புவியை பிணைத்துள்ளது. ஒரு பொருளை கண்டுபிடிக்கும் போது அவ்வலையில் இலையொன்று துண்டிக்கப்படுகிறது. இயற்கையின் அலகில்லா ஆடலின் ஒரு அசைவாகக்கூட அந்நகர்வு இருக்கக்கூடும். இருப்பினும் கண்டுபிடிப்புகள் ஆடம்பரத்துக்கானதாக மாறும் போது வலைப்பின்னல் மிகுதியாக அறுபடுகிறது.

ஏதோ ஒரு புள்ளியில் மனிதன் காட்டு வாழ்க்கையிலிருந்து வெளியேறினான். அதுவே மற்ற விலங்குகளுக்கும் நன்மை பயப்பதாக இருந்திருக்கக்கூடும். இல்லையேல் வேட்டையாடியே நகர்வன அனைத்தையும் அழித்திருப்பான். வெளியேற்றம் என்பது மனிதனுக்கு விதிக்கப்பட்ட நியதியோ என்னவோ? 

சமநிலை என்றால் என்ன? இதற்க்கு முழு முற்றான பதில் சொல்வது இயலாதது. ஆற்றல் ஓரிடத்தில் குவிவதை பகிர்தலின்மூலம் தடுப்பது சமநிலையின் முக்கியமான அம்சம். இயற்கையின் உணவுச்சங்கிலி அத்தகைய பகிர்வை கொண்டது.

நிலைத்தன்மை(consistency), ஆற்றல் பகிரப்படுவதால் நீண்டகாலம் தாக்குப்பிடிக்கும் அம்சம் உடையது. நிலைத்தன்மை என்பது நிரந்தரத்தன்மையன்று. சிறு சிறு மாற்றங்களுடன் ஒரு அமைப்பு நீண்ட காலம் நிர்க்குமென்றால் அது நிலைத்தது என்று பொருள். இருநூறு ஆண்டுகள் தாண்டினிருக்கும் ஒரு வீடு அது கட்டப்பட்ட காலத்திலிருந்த அதே புறத்தோற்றத்தில் நீடிப்பதில்லை. கூரையை செப்பனிடுதல், சாணி மெழுகுதல், சுண்ணாம்பு பூசுதல் ஆகியவை அவ்வீட்டில் நிகழும் சிறு மாற்றங்கள். அதுவும் குறிப்பிட்ட கால இடைவெளியில் செய்தால் போதுமானது. ஆனால் வீட்டின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த இதை செய்தெ ஆக வேண்டும்.

நிலைவாழ்வு என்பது இயற்கையிடமிருந்து அதிக முரண்பாடில்லாத வாழ்க்கை முறையை லட்சியமாக கொண்டது. நுகர்வோர்மயமான சமூகச் சூழலில் எவ்வாறு ஒருவர் இவ்வாழ்க்கை முறையைநோக்கி ஈர்க்கப்படுகிறார்? குவியும் உடமைகளால் ஏற்படும் சலிப்பு, ஆன்மிகத்தேடல் இவ்விரண்டும் முதன்மை காரணங்களாக உள்ளது. ஒரே சுவை அதிகரிக்கும்போது திகட்டளை தோற்றுவிக்கும், இல்லையேல் அடிமைப்படுத்தும். நுகர்பொருளும் அவ்வாறே. ஒரு காலகட்டத்துக்குமேல் சலிப்பை, ரசனையின்மையை   பிறப்பிக்கும். மிகவிரைவில் மற்றொரு பொருள்மீது கவனம் தாவும், அதுவும் சலிக்கவே அடுத்தது. பின் அது ஒரு தொடர் நிகழ்வாக மாறி, பொருட்களிடையே பயணிப்பது மட்டுமே வாழ்வென்றாகும். மனம் பிறழ ஆரம்பிக்கும். சுவாசிக்கும் உயிர்களை கவனிப்பதை நிறுத்தும்.

20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே பொருட்களின் மீதான ஒவ்வாமை தொடங்கிவிட்டது எனலாம். அப்போது வளர்ந்துவந்த புகைப்படக்கலை ஓவியர்களுக்கு பெரும் சவால்களை தொடுத்தது. அதன் விளைவாக யதார்த்தவாதம், இம்ப்ரெஸ்ஸினிசம்(உணர்வுவாதம்), போஸ்ட் இம்ப்ரெஸ்ஸினிசம், க்யூபிஸம், சர்ரியலிசம் என நீண்டு மினிமலிசத்தைக் தோற்றுவித்து முன்னகர்ந்தது. இரண்டாம் உலகப்போருக்கு பின் காட்சி ஊடகக்கலையில் மினிமலிசம் ஆதிக்கம் செலுத்தியது. பல வண்ணங்களுக்கு பதில் இரண்டு வண்ணங்கள், தங்கத்திற்கு பதிலாக பருத்தி நூலிழைகள் என அன்றாட தனிமனித வாழ்வில் உள்ளவற்றைக்கொண்டு கலைப்படைப்பை உருவாக்க அது உந்தியது.

நவீனத்துவ வரலாற்றில் மினிமலிசம் ஒரு மகத்தான செல்வாக்கைக் கொண்டிருந்தது, ஏனெனில் அது கலைப் படைப்புகளைப் பார்ப்பதற்கும், உருவாக்குவதற்கும், அனுபவிப்பதற்கும் புதிய வழியை அறிமுகப்படுத்தியது. மினிமலிஸ்ட் தத்துவம் எளிமையான வரி மற்றும் வடிவத்தின் அத்தியாவசிய கூறுகளை முழுமையாக மகிமைப்படுத்தும் ஒரு பாணியாகும். இது இன்று முக்கியமாக இசை, உட்புற கட்டிட வடிவமைப்பு, கிராஃபிக் வடிவமைப்பு மற்றும் கட்டிடக்கலை ஆகியவற்றில் தன்னை தகவமைத்துள்ளது. இன்றைய மக்கள் மினிமலிசத்தின் அஸ்திவாரங்களையும் மனப்பான்மையையும் வாழ்க்கை முறையாக ஏற்றுக்கொள்வதுவரை வந்துள்ளனர்.

இந்திய நிலத்தின் கிராமத்தில் வாழும் மனிதன் மினிமலிசத்தைக் அறிந்தபின்னரா பொருட்களை சேர்க்காமல் வாழ ஆரம்பித்தான்? எனில் எதற்க்காக இந்த வரலாற்று அறிமுகம் முக்கியமாகிறது? இணையதளம் கொண்டு பின்னப்பட்டிருக்கும் இன்றைய சூழலில் ஒரு இயக்கத்தின் பிறப்பை அறிதல் முக்கியம். "மேற்கத்திய தத்துவத்தை புரிந்துகொள்ள சிறந்த வழி கிறிஸ்தவ இறையியலை கற்பது", என்று என் நண்பர் கூறுவதுண்டு. எந்த மனநிலையில் ஒரு இயக்கம் பிறக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். நகர்ப்புற வாழ்க்கை, நுகர்வோர் கலாச்சாரம் என்பவை மேற்கிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. அவர்கள் அதன்பொருட்டு  அடைந்த தெளிவுகள், அனுபவங்கள் முக்கியமானவை.

அழகியல் நோக்கில் மினிமலிசம் எடுத்துச்செல்லப்பட்ட போது பெரும் வரவேற்பை பெற்றது. மின்னணு பொருட்களில் மோகித்து நிற்கும் கூட்டத்திடம் எளிமையின் அழகை கொண்டுசெல்வது ஒன்றே தீர்வாக அமையக்கூடும். பயன் தருவதாயினும் கானுலாவுக்கு செல்பவர்கள் சுள்ளிகளை பொறுக்கிக்கொள்வதில்லை, பூக்களையே சேகரித்து கொள்கிறார்கள்.

 இந்திய அழகியல் என்பது கலை, கட்டிடக்கலை மற்றும் இலக்கியம் குறித்த தனித்துவமான தத்துவ மற்றும் ஆன்மீகக் கண்ணோட்டமாகும். இந்திய அழகியலில் ரசம் (சமஸ்கிருதம்: ரசம் என்றால் சாரம்), ஒரு அடிப்படை மன நிலையை குறிக்கிறது. மேலும், ஒரு படைப்பின் உணர்ச்சி கருப்பொருளை அல்லது அத்தகைய படைப்பைப் பார்க்கும், படிக்கும், கேட்கும் நபரில் வெளிப்படும் முதன்மை உணர்வையும் குறிக்கும்.

ஆற்றல் அழகியலில் எவ்வாறு வெளிப்படுகிறது? நவ ரசங்களாக வெளிப்படும். பரத முனியின் கூற்றுப்படி, முக்கிய மனித உணர்வுகள்  இன்பம், நகை, கருணை, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அற்புதம், சாந்தம் என வகைப்படுத்தப் பட்டுள்ளது.

ஆற்றலுக்கும் நிலைத்தன்மைக்கும் ஒருவகையில் அழகியல் பாலம் சமைக்கிறது. பலவற்றை சேர்ப்பதிலிருந்து மனதை விளக்கி ஒன்றில் அமையச் செய்கிறது. இசை, காற்றில் குடிகொண்டுள்ள ஆனந்தத்தை; நடனம், உடலில் ததும்பும் உவகையை; ஓவியம், வண்ணங்களில் ஒளிந்துள்ள எழிலை; இலக்கியம், மொழியில் ஓடுகின்ற ஆழ்மனதை; பிரதிபலிக்கின்றன. இங்கே செயல்களை கலையாக பயிற்றுவிக்கும் கல்வி தேவை. மண்ணில் தனித்து அமர்கையில் உவகையோ சாந்தமோ எய்த முடியாமல் போகுமானால் நிலைத்தன்மை நீர்த்துப்போகும் வாய்ப்புள்ளது.

கலை, வாழ்வாதாரம், நிலைத்தன்மையை எவ்வாறு மரபு சார்ந்து ஒன்றிணைப்பது? தொடரும் நாட்களில் இக்கேள்விக்கான விடைகளை அணுக முயற்சிப்போம்.

-பரமகுரு





Posted on: 2022-11-11 20:32:19

No comments


All Rights Reserved© 2023